தூத்துக்குடியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: 2 வாலிபர்கள் காரில் கடத்தல் 5 பேர் கும்பலை போலீசார் விரட்டிப்பிடித்தனர்
தூத்துக்குடியில், 2 வாலிபர்களை காரில் கடத்திய 5 பேர் கும்பலை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்
தூத்துக்குடி, ஏப்.8-
தூத்துக்குடியில், 2 வாலிபர்களை காரில் கடத்திய 5 பேர் கும்பலை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்.
300 ரூபாய் கடன்
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன்களான அருண் (வயது 26), இசக்கி சூர்யா என்ற குட்டி (18) மற்றும் தூத்துக்குடி விளாத்திகுளம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சரவணன் (28) ஆகிய 3 பேரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
அருண், இசக்கிசூர்யா என்ற குட்டி ஆகியோர் சேர்ந்து சரவணனிடம் ரூ.300 கடன் வாங்கினர். அந்த பணத்தை திருப்பி தராமல் இருந்தனர்.
செல்போன் மீட்பு
இந்தநிலையில் அவர்கள் அந்த கம்பெனிக்கு வேலைக்கு செல்லாமல் இருந்தனர். கடந்த வாரம் சரவணன், அருணை சந்தித்து உள்ளார். அப்போது அவரிடம் பணத்தை கேட்டார். தராததால் அவரது செல்போனை எடுத்து சென்று விட்டார். இதனால் அருண், இசக்கி சூர்யா ஆகியோர் சென்று சரவணனை தாக்கி செல்போனை மீட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் தனது உறவினரான பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சண்முகம் மகன் இசக்கிராஜா (32) என்பவரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து இசக்கிராஜா, தனது நண்பர்கள் கே.டி.சி. நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முத்துசெல்வகுமார் (28), செல்வின் மகன் லிவிங்ஸ்டன் (28), நெல்லை குலவணிகர்புரத்தை சேர்ந்த ஜான்சங்கர் மகன் இம்மானுவேல் (27) ஆகியோரை ஒரு காரில் அழைத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு மடத்தூர்-சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் குடோன் அருகே காருடன் நின்றனர். பின்னர் அவர்கள் அருணை அழைத்து உள்ளனர். இதனால் அருண், இசக்கிசூர்யா, அவரது நண்பர் வேதநாயகம் (18) ஆகியோர் அங்கு சென்றனர்.
கடத்தல்
அப்போது அங்கிருந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து அருண் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கி காரில் ஏற்றி உள்ளனர். ஆனால் அருண் அங்கிருந்து தப்பி விட்டார். இதனால் இசக்கிசூர்யா என்ற குட்டி, வேதநாயகம் ஆகிய 2 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். உடனே அருண், தனது தம்பியை கடத்தி செல்வதாக சத்தம் போட்டு உள்ளார்.
இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து, காரை விரட்டினர். ஆனால், கார் வேகமாக சென்றது. அப்போது அந்த பகுதி மக்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. அப்போது காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கார் வேகமாக சென்று விட்டதால், பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
மடக்கினர்
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பின்பக்கம் கண்ணாடி உடைந்த காரில் சிறுவர்களை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பொட்டலூரணி விலக்கு அருகே சென்ற அந்த காரை நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் பார்த்து உள்ளார். உடனடியாக அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார். கார் முறப்பநாடு அருகே வடக்கு காரசேரி நோக்கி சென்றபோது, முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் காரை மடக்க முயன்றார். ஆனால், கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி மீண்டும் தூத்துக்குடி நோக்கி வந்தனர்.
தெய்வச்செயல்புரம் அருகே வந்தபோது ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர்கள் கந்தசாமி, கணேஷ் ஆகியோர் காரை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால் கடத்தல்காரர்கள் மீண்டும் வடக்கு காரசேரி நோக்கி தப்பி சென்றனர். ஆனாலும் தொடர்ந்து விரட்டிச்சென்ற போலீசார் வடக்கு காரசேரியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட 2 வாலிபர்களையும் மீட்டனர். சினிமா பாணியில் நீண்ட தூரம் காரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, சிறுவர்களை கடத்தி சென்றதாக இசக்கிராஜா, முத்துசெல்வகுமார், லிவிங்ஸ்டன், சரவணன், இம்மானுவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல்காரர்களை விரட்டிப்பிடித்த போலீசாரை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கினார்.
Related Tags :
Next Story