தினத்தந்தி புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டி, பொதுமக்கள் குறைகள் பகுதி.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரில் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகள் உள்ளன. அந்தப்பள்ளிகளில் 2 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மாலை வகுப்புகள் முடிந்து வீட்டுக்கும் வரவும், காலை பள்ளிக்குச் செல்லவும் போதிய பஸ் வசதி இல்லை. ஒடுகத்தூரில் இருந்து கீழ்கொத்தூர் வரை ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்களை போல் மாணவிகளும் படிகளில் நின்று பயணம் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-எம்.சுரேஷ், வணிகர்தெரு, ஒடுகத்தூர்.
கட்டிடம் கட்ட மண் பரிசோதனை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி அருகில் ஏரி உள்ளது. தற்போது பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக மண் பரிசோதனை செய்து பள்ளி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
-சி.வெங்கடபதி, சாத்தூர்.
திறக்கப்படாத பொருள்கள் வைப்பறை கட்டிடம்
வேலூர் மாநகராட்சி ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பொருட்கள் வைப்பறை மற்றும் பொதுச்சுகாதார வளாகம் அரியூரில் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். தற்போது கொரோனா பரவல் முடிந்து ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வருகின்றனர். பொருட்கள் வைப்பறை கட்டிடத்தை திறந்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
-என்.மாணிக்கம், அரியூர்.
உடைந்து தொங்கும் தெருவிளக்கு
வேலூர் அருகே சத்துவாச்சாரி குருதோப்பில் உள்ள 8-வது தெருவில், மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு உடைந்து தொங்குகிறது. மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜீவ்காந்தி, வேலூர்.
பாதியில் நிற்கும் கட்டிடப்பணிகள்
அணைக்கட்டு ஒன்றியம் ஊனை வாணியம்பாடி கிராமத்தில் 2016 -2017ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணி நடந்து வந்தது. ரெட்டியூரில் ரூ.9 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. பல ஆண்டுகளாக முடிக்கப்படாத சமுதாயக்கூடம், அங்கன்வாடி கட்டிட பணிகள் பாதியில் நிற்கிறது. கிடப்பில் போடப்பட்ட கட்டிட பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விட ேவண்டும்.
-பாலசுப்பிரமணியம், ரெட்டியூர்.
குளக்கரையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
ஆரணியில் உள்ள சூரியக்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மழை நீரும், கழிவுநீரும் ேசர்ந்து கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் கோழிக்கழிவுகளை கொண்டு வந்து குளத்தில் வீசுகிறார்கள். கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
-விஜயன், ஆரணி.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
திருவண்ணாமலை ஒன்றியம் தச்சம்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியாகும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது. பஸ் ஏற வருபவர்களுக்கு நிழற்குடை வசதி இல்லை. நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குருசாமி, தச்சம்பட்டு.
முழுநேர ரேஷன்கடையாக மாற்ற வேண்டும்
வேலூர் சாய்நாதபுரம் அருகே சாஸ்திரிநகரில் பகுதிநேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இந்தக் கடை செவ்வாய், சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படுகிறது. 2 நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் அங்குக் குவிகின்றனர். மக்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கிறார்கள். பகுதி நேரமாக செயல்படும் இந்தக் கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழுநேர ரேஷன் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.எஸ்.பழனி, வேலூர்.
Related Tags :
Next Story