குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற இளம் பெண்ணை நவீன சிகிச்சை மூலம் காப்பாற்றிய அரசு டாக்டர்கள்


குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற இளம் பெண்ணை நவீன சிகிச்சை மூலம் காப்பாற்றிய அரசு டாக்டர்கள்
x
தினத்தந்தி 8 April 2022 4:50 PM IST (Updated: 8 April 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற நிலையில், உடல் உறுப்புகளில் அதிக ரத்த கசிவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை நவீன சிகிச்சை மூலம் அரசு டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ரத்த கசிவு

சேலம் மாவட்டம், ஜாகீரம்மா பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவசந்திரன். இவரது மனைவி கீர்த்தனா (வயது 19). இந்த நிலையில் கருவுற்ற கீர்த்தனாவுக்கு, கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு ரத்தப்போக்கு அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் இருந்து கீர்த்தனாவை உடனடியாக மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றியுள்ளனர்.

அங்கு பிரசவத்தில் ஏற்பட்ட ரத்தப்போக்கை டாக்டர்கள் நிறுத்தியுள்ளனர். இருந்த போதிலும் அவருக்கு உடலின் உள்ளே உள்ள உறுப்புகளில் இருந்து ரத்தம் வெளியாகியது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கீர்த்தனாவை அங்குள்ள டாக்டர்களின் அறிவுறைப்படி அவரது குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நவீன அறுவை சிகிச்சை

சவாலான சூழ்நிலையில் அங்கு கீர்த்தனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு, கல்லீரல் மற்றும் சிறுகுடலில் உள்ள தமணியில் ரத்தப்போக்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. மேலும் கர்ப்பிணிக்களுக்கு அரிதாக ஏற்படும் ‘ஹெல்ப்சின்ரோம்’ என்ற நோயால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அனந்தகுமாரின் அறிவுறுத்தலின்படி, டாக்டர் பெரியகருப்பண் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இந்த சிகிச்சை குறித்து டாக்டர் அனந்தகுமார் கூறியதாவது:-

நலமுடன் உள்ளார்...

குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற கீர்த்தனாவுக்கு உடலில் ரத்த கசிவு அதிகமாக இருந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த அவருக்கு சிகிச்சை அளிக்க தீர்மானித்தோம். நவீன வகையான அறுவை சிகிச்சை மூலம் கீர்த்தனாவின் தொடை பகுதியில் உள்ள ரத்த குழாயில் சிறிய துளையிட்டு, ரத்த கசிவு ஏற்பட்ட சிறுகுடல் பகுதிக்கு பிளாட்டினம் சுருல் கம்பி அனுப்பி, தொடர்ந்து பசை போன்ற மருந்துக்களான ‘லிப்பிடாலை’ ஊசி மூலம் செலுத்தினோம். இதனால் ரத்த கசிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதம் கீர்த்தனாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நவீன சிகிச்சை மூலம் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய அரசு டாக்டர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.


Next Story