தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில், வ.உ.சி.துறைமுகத்தில் வரி வசூலிக்க சிறப்பு தீர்மானம் நிறைவேறியது
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில், வ.உ.சி. துறைமுகத்தில் வரி வசூலிக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில், வ.உ.சி. துறைமுகத்தில் வரி வசூலிக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர்களுக்கு இனிப்பு மற்றும் ரோஜாப்பூ வழங்கப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து தீர்னமானங்கள் வாசிக்கப்பட்டன.
அப்போது எதிர்க்கட்சி தலைவரான வீரபாகு (அ.தி.மு.க.) பேசும் போது, “மழைநீரை வெளியேற்றுவதற்காக வாங்கப்பட்ட மோட்டார்கள் பாதுகாப்பாக, இயங்கும் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதா?, முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது மேயர் பதிலளிக்கையில், “அனைத்து மோட்டார்களும் கணக்கெடுக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மழைநீரை அகற்ற ரூ.20 கோடி செலவு செய்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 10 நாட்களில் அனைத்து பகுதிளிலும் மழைநீரை அகற்றி உள்ளோம்” என்று கூறினார்.
சொத்து வரி உயர்வு
தொடர்ந்து வீரபாகு பேசுகையில், “தூத்துக்குடி நகரின் காற்று தரத்தை மேம்படுத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் ரூ.3.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதனை வரவேற்கிறோம். இதன்மூலம் மாசு கட்டுப்படுத்துவதற்காக சாலையை சுத்தம் செய்யும் எந்திரம் வாங்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்படுமோ என்ற ஒரு அச்சம் எங்களுக்கு உள்ளது. ஆகையால் மாநகர பகுதியில் ஆலையை திறக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தவில்லை. தற்போது சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தக்கூடாது” என்றார்.
வெளிநடப்பு
இதற்கு பதில் அளித்த மேயர், “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. ஆலையை திறக்கக்கூடாது என்பது தமிழக முதல்-அமைச்சரின் கொள்கை முடிவு. ஆகையால் ஆலை திறக்கப்படாது. மேலும், தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள எட்டயபுரம் ரோடு, வி.இ.ரோடு, ஜார்ஜ் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் சுமார் 2 ஆயிரம் லாரிகள் செல்கின்றன. இதனால் நுண்துகள்கள் காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. அதனை தடுக்க சாலையை சுத்தம் செய்யும் எந்திரம் வாங்கப்படுகிறது. சொத்து வரி உயர்வு தொடர்பாக எந்த தீர்மானமும் தற்போது இல்லை. அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர், அ.தி.மு.க. ஆதரவு சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் ஆக மொத்தம் 7 கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறப்பு தீர்மானங்கள்
அதன்பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி மேயர் 3 சிறப்பு தீர்மானங்களை கொண்டு வந்தார்.
அதன்படி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரிவிதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து துறைமுகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆணையாளருடன் பேசி தீர்வு காணுமாறு தீர்ப்பு கூறப்பட்டு விட்டது. இதனால் துறைமுகம் மற்றும் அந்த பகுதியில் உள்ள 117 கம்பெனிகளுக்கு வரி வசூலிக்க வேண்டும். அந்த நிறுவனங்களை கணக்கீடு செய்வதற்குகூட அனுமதிக்கப்படவில்லை. துறைமுகத்தில் இதுவரை சுமார் ரூ.15 கோடி வரை வரி நிலுவையில் உள்ளது. சென்னை, மும்பை துறைமுகங்கள் போன்று, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலும் வரி வசூலிக்க நடடிவடிக்கை எடுப்பது, கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை தார்சாலையாக மாற்ற ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்வது, தூத்துக்குடி மாநகர பகுதியில் தூய்மை நகரமாக மாற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது ஆகிய 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சாலைைய சீரமைக்க வேண்டும்
பின்னர் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர். அப்போது, ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், டைமண்ட் காலனியில் சாலையை சீரமைக்க வேண்டும். 19-வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி, சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
தட்டார் தெருவில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும். சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு பகுதியில் சாலை அமைக்க வேண்டும். பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நடவடிக்கை
இதற்கு மேயர் பதிலளித்து பேசுகையில், “2008-ம் ஆண்டு போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் தற்போது 3 இடங்களில் சோதனை ஓட்டம் நடக்கிறது. அனைத்து பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்ட உடன் சாலைகள் சீரமைக்கப்படும். தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்நோக்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் வாகனங்களை நிறுத்தும்போது போக்குவரத்து நெரிசல் குறையும். மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சாலைகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்க கூடாது. அந்த வகையில் மக்களுக்கு உபயோகமான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மாநகராட்சி பகுதியில் 116 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் சில பழுதடைந்து உள்ளன. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 60 வார்டுகளிலும் தண்ணீர் தேங்கும் பகுதிகளை அந்தந்த கவுன்சிலர்கள் அறிந்து அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள். அங்கு தண்ணீர் தேங்காமல் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், செயற்பொறியாளர் பிரின்ஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேயர் பேச்சுவார்த்தை
கூட்டத்துக்கு முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன் இருக்கையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கையில் அமராமல் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை மேயர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு முன் இருக்கையில் எதிர்கட்சி தலைவர், செயலாளர் ஆகியோர் அமருவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கூட்ட அரங்குக்கு வந்த மேயர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story