வடமதுரை அருகே லாரி மீது கார் மோதல் தந்தை-மகன் பலி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்


வடமதுரை அருகே லாரி மீது கார் மோதல்  தந்தை-மகன் பலி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்
x
தினத்தந்தி 8 April 2022 7:58 PM IST (Updated: 8 April 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தந்தை-மகன் பலியாகினர்.

வடமதுரை :

கொடைக்கானலுக்கு சுற்றுலா

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் அப்பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி யசோதா (41). இவர்களுக்கு பிரகாஷ் (21) என்ற மகனும், சபி பிரபா (18) என்ற மகளும் இருந்தனர். இந்தநிலையில் செந்தில், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். 
அதன்படி செந்தில் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் வாடகை காரில் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை பிரகாஷ் ஓட்டினார். காரின் முன்பகுதி இருக்கையில் செந்திலும், பின்பகுதி இருக்கையில் யசோதாவும், சபி பிரபாவும் அமர்ந்து வந்தனர். 

லாரி மீது மோதியது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூரில், திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள மேம்பாலத்தில் அவர்கள் வந்தபோது, முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. 
இந்த விபத்தில் லாரியின் பின்பகுதியின் அடியில் சென்று கார் சிக்கிக்கொண்டது. காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த பிரகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தந்தை செந்தில், தாய் யசோதா, தங்கை சபி பிரபா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். 

தந்தை பலி
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கிய செந்தில், யசோதா, சபி பிரபா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செந்தில் உயிரிழந்தார். 
யசோதா மற்றும் சபிபிரபா ஆகிய 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சோகம்
இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 


Next Story