ஏ.டி.சி. பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி


ஏ.டி.சி. பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி
x
தினத்தந்தி 8 April 2022 8:22 PM IST (Updated: 8 April 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏ.டி.சி. பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏ.டி.சி. பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோடை சீசன்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சிறந்த கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. கோடை சீசனை முன்னிட்டு கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். 

சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதாலும், சிலர் வழி தெரியாமல் செல்வதாலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி கமர்சியல் சாலை, மணிக்கூண்டு, லோயர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை காலையில் நிறுத்துபவர்கள் இரவு வரை எடுக்காமல் அப்படியே நிறுத்துகின்றனர். 

பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்

இதையடுத்து தாவரவியல் பூங்கா சாலை உள்பட ஊட்டியில் வாகன நிறுத்துமிடங்கள் எத்தனை உள்ளது, எத்தனை சுற்றுலா வாகனங்களை நிறுத்த முடியும் என போலீசார் ஆய்வு செய்து கண்டறிந்து வருகின்றனர். ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்களை நிறுத்த ஏ.டி.சி. அருகே குதிரை பந்தய மைதானத்தில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

அங்கு ஊட்டி நகராட்சி மூலம் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.  இருப்பினும் தற்போது வசதி ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டும், குழியுமாக இருந்த வாகன நிறுத்துமிடம் சீரமைக்கப்பட்டது. அப்போது வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. இதனால் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவது குறைந்தது. 

வாகனங்கள் நிறுத்த அனுமதி 

இதற்கிடையே கடந்த சில நாட்களாக ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் நுழைவுவாயில் மூடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்த வேண்டும். 

இல்லையென்றால் வருகிற நாட்களில் போக்குவரத்து பாதிப்பு மேலும் அதிகரிக்கும். ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க ஏ.டி.சி. பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் போதுமான இடவசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story