முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா நிர்வாகி கைது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து  அவதூறாக பேசிய பா.ஜனதா நிர்வாகி கைது
x
தினத்தந்தி 8 April 2022 8:45 PM IST (Updated: 8 April 2022 8:45 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
அவதூறு பேச்சு
ஆரல்வாய்மொழியில் பா.ஜனதா பிரசார அணி சார்பில் கடந்த 6-ந் தேதி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பா.ஜனதா பிரசார அணி தலைவர் ஜெயப்பிரகாஷ் (வயது 49) கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரகாஷை கைது செய்ய நேற்று அதிகாலையில் இரணியலில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். 
கைது
இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதாவினர் சிலர் அங்கு திரண்டனர். உடனே கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜெயப்பிரகாஷை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான பா.ஜனதாவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், பிரசார அணி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து பிள்ளை, தோவாளை ஒன்றிய பொதுச்செயலாளர் மகாதேவன்பிள்ளை, கவுன்சிலர் மாதேவன்பிள்ளை, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சுடலைமுத்து, ஒன்றிய விவசாய அணி தலைவர் சிங்காரவேலு, விசுவ இந்து பரிசத் மாநில இணை செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இந்த போராட்டத்தையொட்டி போலீஸ் நிலையம் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story