100 நாள் வேலை அடையாள அட்டை வழங்கக்கோரி சாலை மறியல்
தண்டராம்பட்டு அருகே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்கக்கோரி சாலை மறியல்
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்சிறுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரம் நடுதல் நீர்வரத்து கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது நேற்று காலை வழக்கம்போல பணிகள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
மதியம் 3 மணி ஆகியும் வருகை பதிவேட்டில் பணி செய்த வேலையாட்களின் பெயர்களை களப்பணி பொறுப்பாளர் பதிவு செய்யவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கேட்டபோது ஆன்லைனில் புதிய அடையாள அட்டை வந்தால் மட்டுமே வருகை பதிவேட்டில் பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
வருகை பதிவேட்டில் பதிவு செய்யாமல் தங்களை மாலை வரை வேலை வாங்கியதை கண்டித்தும் புதிய அடையாள அட்டை வழங்கக்கோரியும் அவர்கள் திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு செல்லும் சாலையில் தண்ணீர்ப்பந்தல் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களை சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து விரைவில் அடையாள அட்டை வழங்கி, வருகைப்பதிவு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story