‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளப்படாதது ஏன்?
சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 8-வது தெருவில் உள்ள சாலையில் சாக்கடை கழிவுநீர் வெளியேறி ஒரு வாரமாக தேங்கிய நிலையில் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதுடன் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
- தருண், திருவொற்றியூர்.
கேட்பாரற்று கிடக்கும் ஆபத்தான வயர்கள்
சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் காந்தி தெருவில் பல மாதங்களாக உயர் மின்னழுத்த வயர்கள் பூமிக்குள் புதைக்கப்படாமல் சாலையின் மேலேயே கிடக்கிறது. இந்த தெருவை கடந்து செல்லும் குழந்தைகள், முதியோர் உட்பட பாதசாரிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கிடக்கும் மின்னழுத்த வயர்களை அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?
- ஜகநாதன், திருவான்மியூர்.
வீணாக வெளியேறும் குடிநீர்
சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவில் இருக்கும் குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை அடைக்காமல் வைத்திருந்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும்.
- செல்வம், அயனாவரம்.
அபாயகரமான வடிகால்வாய்
சென்னை மேற்கு நமச்சிவாயபுரம் முதல் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் சரி செய்யப்பட்டது. அப்போது வடிகால்வாயை ஒட்டியுள்ள இடிந்த பாகத்தை சரி செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அபாயகரமான நிலையில் காட்சி தருகிறது. விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சாலைவாசிகள்.
எரியாத சிக்னல் கவனிக்கப்படுமா?
சென்னை தியாகராயநகர் சிவஞானம் சாலை, வெங்கட்நாராயணா சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இருக்கும் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. மேலும் கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் நிழற்குடையானது அகற்றப்பட்டு சாலையோரத்தில் போட்டபடியே கிடக்கிறது. சிக்னல் வேலை செய்யாததால் வாகன ஓட்டிகள் இப்பகுதியில் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பாதசாரிகள்.
சேதமடைந்த வடிகால்வாய், சாலைவாசிகள் அவதி
சென்னை பள்ளிகரணை துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாயின் மூடி உடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. இந்தநிலை 2 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. அருகில் பள்ளி உள்ளதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட சாலையை கடந்து செல்லும் சாலைவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் பள்ளம்போல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு வடிகால்வாய் சரி செய்யப்படுமா?
- ராஜகோபாலன், பள்ளிக்கரணை.
கழிப்பிடமாக மாறிய வாகன நிறுத்தம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தங்கள் தற்போது சிறுநீர் கழிப்பிடமாக மாறிவிட்டன. அலங்கோலமான இந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தவே பொதுமக்கள் முகம் சுழிக்கிறார்கள். மேலும் மார்க்கெட் வளாகத்தில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம் மிகுதியாக உள்ளது. குறிப்பாக 18-ம் எண் நுழைவு வாயில் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே இந்த குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையேல் துர்நாற்றம் வெளியே பரவாதவாறு மார்க்கெட்டை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள், கோயம்பேடு.
பழுதடைந்த நிலையில் மின்கம்பம்
காஞ்சீபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் கிராமத்தில் இருக்கும் மின்கம்பம் ஒன்று பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கும் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமென்றாலும் விழுந்து விழக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டுகிறோம்.
- சுபாஷ், நீர்வள்ளூர்.
தெருநாய் தொல்லை
சென்னை அண்ணா நகர் பம்மல் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது. இப்பகுதியில் நடந்து செல்லும் குழந்தைகள் உள்பட பெரும்பாலானோரை பார்த்து குறைப்பதுடன், வாகன ஓட்டிகளையும் துரத்துகின்றன. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- செந்தில்குமார், அண்ணாநகர்.
சாலை வசதி வேண்டும்
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி, ஸ்ரீ சக்ராநகர், பிராணவதி தெருவில் உள்ள சாலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கருங்கற்களை கொட்டி மழை வெள்ளம் காரணமாக சாலையை சமன் செய்தனர். அதன்பின் நிரந்தர சாலை அமைக்கப்படாததால் இந்த தெருவில் வசிக்கும் முதியோர் மற்றும் குழந்தைகள் சாலையை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். எனவே தெருவில் நிரந்தரமாக தரமான சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுகொள்கின்றோம்.
- கருணாகரன், மாங்காடு.
Related Tags :
Next Story