சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
காங்கயம்,
காங்கயத்தில் நேற்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் சொத்துவரி உயர்வை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகர்மன்ற கூட்டம்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நகர்மன்றக் கூட்டம் நகராட்சி கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் கூறியபோது:-
தற்போது பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில், சொத்துவரியில் எந்த உயர்வும் இல்லாததோடு, உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருமானத்திலும் எந்த உயர்வும் இல்லை. நகராட்சிகளின் நிர்வாகச் செலவினமும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் நகராட்சிகளில் அதிகரித்துள்ள நிதித்தேவை, பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் இதர ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்து கொள்ளலாம் என சொத்துவரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது.
சொத்து வரி உயர்வு
இதன்படி காங்கயம் நகராட்சியில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீத வரி உயர்வும், 601 முதல் 1200 சதுர அடி வரை உள்ள கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரை மற்றும் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கு தற்போதுள்ள சொத்துவரியில் 100 சதவீதம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 600 சதுர அடி கொண்ட கட்டிடத்திற்கு சொத்து வரியாக திருப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.2,402, காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளகோவில் நகராட்சியில் ரூ.1,073, பவானி நகராட்சியில் ரூ.1,030 வசூலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் காங்கயம் நகராட்சியில் ரூ.772 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது என்றார்.
அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு
அதிகரிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரியினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி, அ.தி.மு.க. வைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.துரைசாமி தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு, சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், பொறியாளர் ம.திலீபன், நகர்மன்ற துணைத் தலைவர் ர.கமலவேணி உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story