காதலனை திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி


காதலனை திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 8 April 2022 10:20 PM IST (Updated: 8 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

காதலனை கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்டார்

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பனங்காட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சிவரஞ்சனி(வயது 20). இவர், சீர்காழியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 
கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காதலனுடன் தஞ்சம்
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மாணவி சிவரஞ்சனி, வசந்தகுமார்(22) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். 
பின்னர் சிவரஞ்சனி போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம்
கடந்த 3 ஆண்டுகளாக நானும், எனது உறவினரான தரங்கம்பாடியை சேர்ந்த வசந்தகுமாரும் காதலித்து வந்தோம். இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது, எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளாததோடு, வசந்தகுமாரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தரிவித்தனர். மேலும் எனது விருப்பத்தை மீறி எனக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.
இதன் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிய நானும், வசந்தகுமாரும் கடந்த 6-ந் தேதி தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
என்னை எனது கணவர் வசந்தகுமார் கடத்தி சென்று விட்டதாக சீர்காழி மற்றும் பொறையாறு போலீஸ் நிலையங்களில் எனது பெற்றோரும், என்னை நிச்சயம் செய்தவரின் தரப்பினரும் சேர்ந்து புகார் அளித்துள்ளனர். மேலும, வசந்தகுமாரின் குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனவே காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திருமணத்திற்கான சான்றுகளை அளித்துவிட்டு கணவருடன் செல்லலாம். உங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story