வேப்பூரில் பரபரப்பு மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவர் கைது அடகு வைத்து காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம்
வேப்பூரில் மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து தனது காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேப்பூர்,
வேப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலக்கவுண்டர் மனைவி பட்டத்தாள் (வயது 75.) இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 6-ந்தேதி, பட்டாத்தாளுக்கு அவரது மகள் பார்வதி, காபி கொடுக்க சென்றார்.
அப்போது, வீட்டில் பட்டத்தாள் கழுத்து மற்றும் கையில் நகைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அடகுகடையில் விசாரணை
திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா உத்தரவின் பேரில் வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறுபாக்கம் குற்றபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்தும் விசாரித்தனர்.
அதில், மூதாட்டி அணிந்திருந்த நகையை யாரேனும் அடகு வைத்து சென்றார்களா? என்கிற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
அப்போது, வேப்பூரில் உள்ள ஒரு அடகு கடையில் பட்டத்தாளின் நகைகள் அடகு வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த நகையை யார் அடகு வைத்தது என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி பார்த்தனர். அதில், வாலிபர் ஒருவர் நகையை எடுத்து வந்து அடகு வைத்தது தெரியவந்து.
மாணவர் கைது
அவர் யார் என்பது குறித்து விசாரித்த போது, வேப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சூர்யா (வயது 21) என்பதும், பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, சூர்யாவை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பட்டாத்தாளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.
காதலிக்கு செல்போன் கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
தனக்கு பணம் தேவை இருந்தது, இதனால் கடந்த 6-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த பட்டத்தாளிடம் நகையை பறிக்க அங்கு சென்றேன். அப்போது, அவர் தடுத்ததால், அவரது முகத்தை கையால் மூடி, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நகைகளை திருடி வந்துவிட்டேன்.
திருடிய நகையை வேப்பூரில் உள்ள ஒரு அடகு கடையில் ரூ.95 ஆயிரத்துக்கு அடகு வைத்தேன். அதன் மூலம் எனது காதலிக்கு புதிய செல்போன், துணிகளை வாங்கி கொடுத்தேன்.
மேலும், திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் 5 மாதம் தங்குவதற்கு முன்பணமும் செலுத்தி, தங்கியிருந்தேன். இந்த நிலையில் நான் போலீசில் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கல்லூரி மாணவர் தனது காதலிக்கு செல்போன் பரிசளிக்க மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிய சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story