காரிமங்கலம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதம்
காரிமங்கலம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
கரும்பு தோட்டத்தில் தீ
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55). விவசாயி. இவர் 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். தோட்டத்தின் வழியாக மின்கம்பியும் செல்வதுடன், உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இந்த நிலையில் கரும்பு அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் டிரான்ஸ்பார்மரில் திடீர் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் கரும்பு தோட்டம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
போலீசார் விசாரணை
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கரும்பு தோட்டத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு எரிந்து சேதமான சம்பவத்தால் விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.
Related Tags :
Next Story