ஆக்கிரமிக்கப்பட்ட தார்சாலையை மீட்டு தரக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


ஆக்கிரமிக்கப்பட்ட தார்சாலையை மீட்டு தரக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 11:25 PM IST (Updated: 8 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட தார்சாலையை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட தார்சாலையை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் போராட்டம்
தர்மபுரி அருகே முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சவுளுக்குட்டை கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார்சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கற்கள் மற்றும் முட்செடிகள் போட்டு அடைப்பு செய்தனர். இதனால் கிராமமக்கள் சென்றுவர முடியாமல் தவித்து வந்தனர்.
இந்தநிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட தார்சாலையை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் நேற்று ராஜாதோப்பு கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எச்சரிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட தார்சாலையை மீட்டுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, கிராம மக்கள் பஸ்சை விடுவித்தனர். மேலும் போராட்டத்தையும் அவர்கள் கைவிட்டனர். பின்னர் அதிகாரிகள், தார்சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார்சாலையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்த கற்கள் மற்றும் முட்களை அகற்றி, பொதுமக்கள் தார்சாலையில் சென்று வர நடவடிக்கை எடுத்தனர்.இந்த போராட்டம் காரணமாக அந்த கிராமத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Next Story