கறம்பக்குடி அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் மரக்கன்றுகள் நடப்பட்டன


கறம்பக்குடி அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் மரக்கன்றுகள் நடப்பட்டன
x
தினத்தந்தி 8 April 2022 11:36 PM IST (Updated: 8 April 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

கறம்பக்குடி:
தொடர் விபத்துகள்
கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் புது விடுதியில் உள்ள கடைவீதி பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டும், கடைகள், கட்டிடங்கள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர் விபத்துக்களும் நடைபெற்று வந்தன. எனவே இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி நெடுஞ்சாலைதுறை சார்பில் பலமுறை அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் 
 இதைதொடர்ந்து இன்று கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில், நெடுஞ்சாலைதுறை மற்றும் நிலஅளவைதுறை ஊழியர்கள் ரெகுநாதபுரம் புதுவிடுதியில் உள்ள கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலை ஓரத்தில் இருந்த அனைத்து கட்சி கொடி கம்பங்கள், தனியார் கட்டிடங்கள், சுற்றுச்சுவர், கொட்டகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
மேலும் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு கம்பிவலை கூண்டும் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்திய நெடுஞ்சாலைதுறை மற்றும் வருவாய்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் அங்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து அப்பகுதியில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story