அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும்- மத்திய அரசுக்கு, தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
கோப்பு படம்அத்தியாவசிய மருந்துகளில் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
மும்பை,
அத்தியாவசிய மருந்துகளில் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
அதிகரித்த விலை
பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தொற்றுநோய், காய்ச்சல், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் வைட்டமின் மாத்திரை உள்ளிட்ட முக்கிய மருந்துகளின் விலை கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அதிகரித்தது.
இந்த விலை உயர்வுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ் தபஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
நியாயமற்ற முடிவு
நாட்டில் பெட்ரோல், டீசல், கியாஸ், சமையல் எண்ணெய் மற்றும் தானியங்கள் போன்றவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
இத்தகைய நெருக்கடியான நேரத்தில் 800 அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் விலையானது ஏப்ரல் 1-ந் தேதி முதல் 11 சதவீதம் உயர்த்தி மற்றொரு நியாயமற்ற முடிவை மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ளது.
பொருளாதார ரீதியாக மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முடிவை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. விலைவாசி உயர்வை குறைப்பது குறித்து மத்திய அரசு சிறிதும் சிந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லாவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






