பள்ளிபாளையம் அருகே இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்


பள்ளிபாளையம் அருகே இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
x
தினத்தந்தி 8 April 2022 11:57 PM IST (Updated: 8 April 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிக்கு வர இயலாமல் அதிக அளவில் இயலாமை உடைய சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய மாணவ, மாணவிகள் இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வியை முழுமையாக பெறும் வகையில் கல்வி வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் பெறும் விதத்தில் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அந்த முகாம்களில் பிறந்தது முதல் 18 வயது உடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் நல டாக்டர், கண் டாக்டர், காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், முட நீக்கியல் டாக்டர், மனநல டாக்டர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். 
அதன்படி பள்ளிபாளையம் வட்டாரத்தில் குழந்தைகளின் மாற்றுத்திறன் தன்மையை அளவீடு செய்ய ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
வீட்டில் பயிற்சி
முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டு பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்தல், தேசிய அடையாள அட்டை பெற்றுத் தருதல், தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள் வழங்குதல், கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று தருதல், தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீட்டிலேயே பயிற்சி அளித்தல், பள்ளி செல்லா மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆயத்த முகாம்களில் பயிற்சி அளித்தல், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஆதார வளமையத்தில் பயிற்சி அளித்தல், விளையாட்டுடன் கூடிய கல்வியை அளித்தல், பிசியோதெரபி சிகிச்சை, பேச்சு பயிற்சி மற்றும் சிறப்பு கல்வி அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
அதேபோல் அறுவை சிகிச்சை தேவைப்படும் என கண்டறியப்படும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு இயன்முறை சிகிச்சை மூலம் இயல்பு நிலைக்கு திரும்ப பயிற்சிகளும் அளிக்கப்படும். எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைக்கு உள்ள குறைபாடுகளை முழுமையாக கண்டறிந்து, அவர்களை இயல்பான குழந்தைகளாக மாற்றவும், கல்வி கற்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

Next Story