பள்ளிபாளையம் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பள்ளிபாளையம் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பள்ளிபாளையம்:
நகராட்சி கூட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி கூட்டம் நகராட்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள 7 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அரசு புதிதாக அறிவித்த சொத்து வரி உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சொத்து வரி உயர்வு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சியில் புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்துவது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்களை எழுப்பினர். பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்களான செந்தில், கோபாலகிருஷ்ணன், ஜெயா வைத்தி, சரவணன், சுஜாதா மாரிமுத்து, சம்பூர்ணம், சுசீலா ஆகிய 7 பேரும் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் கூறுகையில், 150 சதவீதம் வரையிலான சொத்து வரி உயர்வை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம். இதனால் சிறு தொழில் செய்பவர்கள் முதல், பெரிய தொழில் செய்பவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும், வீட்டு சொத்து வரி, காலி மனை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இதனிடையே பள்ளிபாளையம் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி அமல்படுத்துவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நகராட்சியில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதமும், 600 முதல் 1,200 அடி வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1,800-க்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்யப்பட்டது.
வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை பயன்பாட்டு கட்டிடங்கள், சுயநிதி பள்ளி, கல்லூரிகளுக்கு 75 சதவீதமும், காலி மனையில் ஒரு சதுர அடிக்கு 100 சதவீதமும் வரி உயர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டுதோறும் வரி உயர்வு
மேலும், சொத்து வரி அல்லது காலி மனை வரியில் ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அல்லது கடந்த 5 ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம் இதில் எது அதிகமோ அதன் அடிப்படையில் வரி உயர்வு செய்து கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் நகராட்சி அலுவலர் அசோக் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story