பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய 2 மகன்களின் சொத்துகள் ரத்து
பெற்றோரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றிய 2 மகன்களின் சொத்துகளை ரத்து செய்து பத்மநாபபுரம் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தக்கலை:
பெற்றோரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றிய 2 மகன்களின் சொத்துகளை ரத்து செய்து பத்மநாபபுரம் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சொத்து
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காஞ்சான் காட்டு விளையில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 70). இவருடைய மனைவி ரோஸ்லெட் (60). இவர்களுக்கு வினுகுமார் (32), விஜில்குமார்(30) என இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் மஸ்கட்டில் வேலை செய்து வருகிறார்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் திருமணத்திற்கு முன்பே பழைய குடும்ப வீட்டை இடித்துவிட்டு தனித்தனியே வீடு கட்டியுள்ளனர். அதற்கு ராஜ்குமார்-ரோஸ்லெட் ஆகியோர் பணம் கொடுத்தனர். பின்னர் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் ராஜ்குமாருக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தை தலா 5 சென்ட் வீதம் இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய செட்டில்மென்ட் ஆவணமாக தக்கலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
நிபந்தனை
அதில் பெற்றோர்கள் இருவரும் இறக்கும் வரை இரண்டு மகன்கள் வீட்டில் வசித்து கொள்ளலாம் எனவும் மகன்கள் அவர்களை பராமரிக்க வேண்டும் எனவும் நிபந்தனையில் கூறப்பட்டிருந்தது,
இந்த நிலையில் இரு மகன்களும் வெளிநாடு சென்றபிறகு மூத்தமகன் வினுகுமார் வீட்டில் ராஜ்குமார்-ரோஸ்லெட் வசித்து வந்தனர், 2 மாதங்களுக்கு முன்பு வினுகுமாரின் மனைவி வீட்டைவிட்டு இருவரையும் வெளியே அனுப்பியதாகவும், இதனால் அவர்கள் இளையமகன் விஜில்குமார் வீட்டுக்கு சென்றனர் அங்கும் சிறிது நாட்களில் இருவரையும் வீட்டைவிட்டு இளைய மருமகளும் வெளியே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராஜ்குமார்-ரோஸ்லெட் ஆகியோர் வெளிநாட்டில் இருக்கும் மகன்களோடு பேசியும் எந்த பலனும் ஏற்படவில்லை.
மனு
அதைத்தொடர்ந்து ராஜ்குமார்-ரோஸ்லெட் ஆகியோர் பத்மநாபபுரம் உட்கோட்ட நடுவர் தீர்ப்பாய அலுவலகத்தில் கடந்த 21-ந் தேதி மனு கொடுத்தனர். அந்த மனுவை உட்கோட்டநடுவரும், பத்மநாபபுரம் உதவி கலெக்டருமான அலர்மேல்மங்கை பரிசீலனை செய்து, இருதரப்பினரையும் மார்ச் 31-ந்தேதி அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது ராஜ்குமார்-ரோஸ்லெட் ஆஜரானார்கள். மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் தரப்பில் மூத்த மருமகள் ஜினுமோள், இளைய மருமகள் மேரி மெட்சிபா மலர் ஆகியோர் ஆஜாரானார்கள். புகார் குறித்து அவர்களிடம் கேட்ட போது, கணவன்கள் விருப்பப்படியே மாமனார்-மாமியாரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக கூறினார்கள்.
அதை பதிவு செய்துகொண்ட உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் பெற்றோரை கவனிக்க தவறிய 2 மகன்களுக்கும் ராஜ்குமார் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்தார், அதற்கான ஆணையை நேற்று மாலை ராஜ்குமார்-ரோஸ்லெட் ஆகியோரிடம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை வழங்கினார், மேலும் ஆணை நகலை இரு மகன்களுக்கும், தக்கலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story