சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது


சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது
x
தினத்தந்தி 9 April 2022 1:34 AM IST (Updated: 9 April 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு திரளான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வருகிறார்கள்.

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு திரளான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வருகிறார்கள்.
தண்டு மாரியம்மன் கோவில் 
சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மனின் அக்காள் என தண்டு மாரியம்மனை பக்தர்கள் அழைத்து வழிபட்டு வருகிறார்கள். 
இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 6-ந் தேதி காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அன்று இரவு 15 அடி உயரம் மற்றும் 4 அடி பருமன் கொண்ட மரம் வெட்டி எடுக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் மாலை அந்த மரம் கம்பமாக சீவி வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கம்பத்தை பக்தர்கள் பவானி ஆற்றுக்கு எடுத்து சென்றனர். அங்கு கம்பத்துக்கு ஆற்று நீர் ஊற்றப்பட்டதும், கம்பம் முழுவதும் மஞ்சள் பூசி, விபூதி வைக்கப்பட்டது. 
பின்னர் கம்பத்துக்கு மலர் மாலை அணிவித்து பூஜை நடைபெற்றது. இதையடுத்து தாரை, தப்பட்டை முழங்க கம்பத்தை       பக்தர்கள் தூக்கிகொண்டு      தண்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். 
கம்பம் நடப்பட்டது
கோவிலை சென்றடைந்ததும் கம்பத்துக்கு பூசாரிகள் சிறப்பு பூஜை செய்து கம்பத்தை நட்டு வைத்தனர். இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் நேற்று முன்தினம் இரவு கம்பத்தை சுற்றி அந்த பகுதியை இளைஞர்கள் ஆடி வந்தனர். வருகிற 19-ந் தேதி வரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் கம்பத்தை சுற்றி ஆடுவாா்கள். பின்னர் அன்று இரவு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 20-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 21-ந் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், 23-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மறுபூஜையுடன் கோவில் விழா நிறைவடைகிறது

Next Story