கத்தியுடன் பஸ்சில் ஏறி டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல்


கத்தியுடன் பஸ்சில் ஏறி டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 9 April 2022 1:42 AM IST (Updated: 9 April 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே கத்தியுடன் பஸ்சில் ஏறி டிரைவர் - கண்டக்டர் மீது வாலிபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கும்பகோணம்;
கும்பகோணம் அருகே கத்தியுடன் பஸ்சில் ஏறி டிரைவர் - கண்டக்டர் மீது வாலிபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தகராறு
கும்பகோணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை தாராசுரம் வழியாக எலுமிச்சங்காபாளையத்துக்கு, தனியார் மினி பஸ் பயணிகளுடன் சென்றது. பஸ்சை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கூத்தங்குடியைச் சேர்ந்த மனோகரன் மகன் வசந்த் (வயது24) ஓட்டி சென்றார். கண்டக்டராக கும்பகோணம் தாலுகா ஆலமாங் குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் வினோத் (25) பணியில் இருந்தார்.
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் தெற்கு வீதி பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதடைந்து சாலையில் நின்றது. இதனால் அந்த மினி பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர்  அடிக்கடி இப்படி பஸ் பழுதடைந்தால் எப்படி பயணம் செய்வது என கேட்டு பஸ் கண்டக்டர் வினோத்துடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் அந்த வாலிபருக்கும் கண்டக்டர் வினோத்துக்கும் இடையே  கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்சில் பழுது நீக்கப்பட்டு புறப்பட்டதும் தகராறில் ஈடுபட்ட வாலிபர், தாராசுரம் மார்கெட் நிறுத்தத்தில் இறங்கி சென்றார்.
தாக்குதல்
இதைத்தொடர்ந்து, தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் பகுதியில் மினிபஸ் சென்று கொண்டிருந்த போது மினி பஸ்சை பின்தொடர்ந்து வந்த அந்த வாலிபர் பஸ்சை மறித்து நிறுத்தினார். பின்னர் கையில் பட்டாக்கத்தியுடன் பஸ்சில் ஏறிய அந்த வாலிபர், பஸ் கண்டக்டர் வினோத் மற்றும் டிரைவர் வசந்த் இருவரையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சமூகவலைதளங்களில்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த வினோத் மற்றும் வசந்த் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வினோத், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான தாக்குதல் காட்சிகளை ஆய்வு செய்தனர். 
இதில் பஸ்சில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் கும்பகோணம் கர்ணகொல்லை தெருவை சேர்ந்த ஹரிஹரன் (எ) மோப்பஹரி என போலீசாருக்கு தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ஹரிஹரனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் பஸ்சில் வாலிபர் ஒருவர் கையில் ஆயுதத்துடன் ஏறி டிரைவர்- கண்டக்டரை தாக்கிய வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story