திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர வாகனங்கள் செல்ல தடை: சோதனை சாவடியில் அணிவகுத்து நின்ற லாரிகள்
திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டதால் காரப்பள்ளம் சோதனை சாவடியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரிகள் அணிவகுத்து நின்றன. இதனால் வனத்துறையினரிடம் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டதால் காரப்பள்ளம் சோதனை சாவடியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரிகள் அணிவகுத்து நின்றன. இதனால் வனத்துறையினரிடம் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த திம்பம் மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.
போக்குவரத்துக்கு தடை
இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்,’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
12 சக்கரங்களுக்கு மேல்...
இந்த தடை காரணமாக பண்ணாரி சோதனை சாவடியிலும், காரப்பள்ளம் சோதனை சாவடியிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் போக்குவரத்து தடை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் தாளவாடி விவசாய சங்க தலைவர் கண்ணையன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில், ‘12 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் மற்றும் 16.2 டன்னுக்கு மேல் எடையை ஏற்றி செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு எப்போதுமே திம்பம் மலைப்பாதையில் அனுமதி இல்லை. 10 சக்கர மற்றும் 16.2 டன்னுக்கு குறைவான வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்லலாம். அதுவும் அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ெசல்ல வேண்டும்,’ என உத்தரவிட்டிருந்தனர்.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் செல்வதற்காக நேற்று ஏராளமான கனரக வாகனங்கள் காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதிக்கு வந்தன. ஆனால் அங்கு பணியில் இருந்த வனத்துறையினர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் ஏராளமான லாரிகள் நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து லாரி டிரைவர்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக காரப்பள்ளம் சோதனை சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினர் கூறுகையில், ‘இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் நாளை (அதாவது இன்று) முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை,’ என்றனர். இதில் டிரைவர்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து திம்பம் மலைப்பாதையில் லாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story