இயற்கை விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள்
ஆண்டுதோறும் ரசாயன உரத்தின் விலை உயர்வடைவதால் விவசாயிகள், இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
நாஞ்சிக்கோட்டை;
ஆண்டுதோறும் ரசாயன உரத்தின் விலை உயர்வடைவதால் விவசாயிகள், இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
ரசாயன உரங்கள் விலை உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகள் குருவை, சம்பா, தாளடி என ஆண்டுேதாறும் மூன்று போக சாகுபடி செய்து வருகின்றனர். மேட்டூர் அணை வழக்கம்போல் ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டால் குறுவை சாகுபடியின் அளவு அதிகரிக்கும். குறுவை அறுவடை முடிந்தவுடன் அதே அளவுக்கு தாளடி நடவும் நடைபெறும்.
நெல் சாகுபடிக்கு அதிக அளவில் டி.ஏ.பி. மற்றும் கலப்பு உரம், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட பல்வேறு ரசாயன உரங்கள் தேவைப்படுவதால் அதனுடைய விலை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இயற்கை விவசாயத்துக்கு மாறுகிறார்கள்
இதனால் விவசாயிகள், சாகுபடி செலவு கூடுதலாக ஆவதால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி அறுவடை முடித்த பின்னர் இயற்கை உரத்தை நாடி செல்கின்றனர்.
இதற்காக நாஞ்சிக்கோட்டை அருகில் உள்ள நடுவூர், பஞ்சநதிக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, நெல்லுப்பட்டு, கோவிலூர் செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயற்கை உரத்திற்காக மாட்டுக்கிடையையும், ஆட்டுக் கிடையையும் போட்டு வருகிறார்கள்.
கிடை போடுகிறார்கள்
வயல்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் மாடு, ஆடுகள் அடைத்து வைக்கப்படுவதால் இவைகளின் மூலம் கிடைக்கும் சிறுநீர், சாணம் போன்றவை பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் கிடை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இயற்கை உரத்திற்கு நாடிச்சென்ற தகவல் அறிந்து வெளியூர்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள் தங்களது ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஆட்டுக்கிடை வைப்பதற்காக இந்த ஊர்களுக்கு நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
செலவு குறையும்
ஆடு மற்றும் மாட்டு கிடை போடுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒருநாள் கூலியாக ரூ.500 முதல் ரூ.750 வரை கொடுப்பதாக கூறும் விவசாயிகள், இதனால் உரத்திற்கான செலவுகள் குறையும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகக்கூடும் என்கிற அச்சமும் அவர்களிடம் நிலவுகிறது. அதனால் இயற்கை சாகுபடியை நோக்கி விவசாயிகள் நகர்ந்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story