பெங்களூருவில் கஞ்சா விற்ற ஒடிசாவை சேர்ந்த 3 பேர் கைது


பெங்களூருவில் கஞ்சா விற்ற ஒடிசாவை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2022 2:18 AM IST (Updated: 9 April 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

ஒடிசாவை சேர்ந்தவர்கள்

  பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட், 1-வது பிளாக்கில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே நாகவாரா கிராமத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு பின்புறத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கோவிந்தபுரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கட்டிடத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

  அப்போது பல்வேறு மூட்டைகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டிடத்தில் தங்கி இருந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமரகரா (வயது 22), ரமேஷ் கீமுன்டி (25), மங்குல் சிசா (20) என்று தெரிந்தது.

ரூ.1½ கோடி கஞ்சா பறிமுதல்

  இவர்கள் 3 பேரும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர். அந்த கஞ்சாவை கட்டிடத்தில் பதுக்கி வைத்து தனக்கு தெரிந்த நபர்கள், சிறிய வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. ஏற்கனவே 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

  கைதான 3 பேரிடம் இருந்து 290 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 45 லட்சம் ஆகும். மேற்கண்ட தகவலை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் எஸ்.குலேத் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். கைதான 3 பேர் மீதும் கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story