நில வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதம் குறைப்பு சலுகை மேலும் நீட்டிப்பு; ஆர்.அசோக் பேட்டி
கர்நாடகத்தில் நில வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதம் குறைப்பு சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பெங்களூரு:
வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
3 மாதங்களுக்கு நீட்டிப்பு
கர்நாடகத்தில் நில பதிவுத்துறையில் அரசின் நில வழிகாட்டு மதிப்பில் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்த சலுகை 3 மாதங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் அந்த நில மதிப்பு குறைப்பு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும். முத்திரைத்தாள் துறையில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதை விட கூடுதாக ரூ.1,300 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. நில மதிப்பு குறைப்பு கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
10 சதவீத குறைப்பு
பொதுமக்கள் தங்களின் நிலத்தை விரைவாக பதிவு செய்து கொள்ள வசதியாக கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி நில மதிப்பு குறைக்கப்பட்டது. வருவாய் நிலம், வீட்டுமனை, வீடு போன்ற அனைத்திற்கும் இந்த 10 சதவீத குறைப்பு சலுகை வழங்கப்பட்டது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
Related Tags :
Next Story