யார் என்ன பிரசாரம் செய்தாலும் கர்நாடகத்தின் தொழில் வளர்ச்சியை தடுக்க முடியாது; பசவராஜ் பொம்மை பேட்டி
யார் என்ன பிரசாரம் செய்தாலும் கர்நாடகத்தின் தொழில் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மாநகராட்சி பட்ஜெட்
பெங்களூருவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை பெய்ததால் சாலை மேம்பாட்டு பணிகளில் சிறிது இடையூறு ஏற்பட்டது. தற்போது சாலைகள் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அனைத்து விவரங்களும் பொது வெளியில் உள்ளன. நகரத்தோனா திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி பட்ஜெட்டிலும் சாலைகள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. இதில் கர்நாடகத்தை பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. அந்த மாநிலங்கள் தற்போது தான் வளர்ந்து வருகின்றன. இன்னொரு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களை இங்கு வருமாறு அழைப்பது சரியல்ல. நான் அவ்வாறு பிற மாநில முதலீட்டாளர்களை அழைக்கவில்லை. இதுவே நமது பலம்.
தடுக்க முடியாது
பிற மாநில தொழில் முதலீட்டாளர்களை அழைக்கிறார்கள் என்றால், அந்த மாநிலங்களுக்கு முதலீடுகள் வரவில்லை என்று அர்த்தம். இது அவர்களின் பலவீனம். கர்நாடகத்திற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் நாட்களில் இன்னும் தொழில் முதலீடுகள் வரும். கடந்த 3 காலாண்டில் கர்நாடகத்திற்கு தான் அதிக பன்னாட்டு நேரடி முதலீடுகள் வந்துள்ளன.
தமிழ்நாடு, தெலுங்கானா தங்களின் மாநிலங்களை வளர்க்கட்டும். நாங்கள் எங்களின் சொந்த பலத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம். யார் என்ன பிரசாரம் செய்தாலும், கர்நாடகத்தின் தொழில் வளர்ச்சியை தடுக்க முடியாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story