அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்
அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மணிகண்டம்:
மணிகண்டம் அருகே தீரன் மாநகரில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட மகா கணபதி கோவில் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி முதல் நேற்று காலை வரை நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க அந்தந்த கோவில் கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கருடபகவான் தரிசனத்திற்கு பிறகு கோவிலின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து கோவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story