ரெயிலில் பயணியை சுட்டுக்கொன்ற சி.ஆர்.பி.எப். வீரருக்கு 7 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


ரெயிலில் பயணியை சுட்டுக்கொன்ற சி.ஆர்.பி.எப். வீரருக்கு 7 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 April 2022 2:42 PM IST (Updated: 9 April 2022 2:42 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் இடம் தரமறுத்த சகபயணியை சுட்டுக்கொன்ற மத்திய ரிசர்வ்படை வீரருக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர்,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அத்தூல் சந்திரதாஸ். மத்திய ரிசர்வ் படையில் தலைமை போலீசாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு சென்னையில் இருந்து கோவை செல்லும் சேரன் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, உடன் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம், கூப்பிட்டான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவிடம் அமர இருக்கை கேட்டு உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அத்தூல் சந்திரதாஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவை சுட்டுகொலை செய்தார். இதுபற்றி அரக்கோணம் இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 1996-ம் ஆண்டு அத்தூல் சந்திரதாஸை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்த வழக்கு கடந்த 2002-ம் ஆண்டு கடம்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே அத்தூல் சந்திரதாஸ் தலை மறைவானார். இதையடுத்து கோர்ட்டு 2002-ம் ஆண்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் பதுங்கியிருந்த அத்தூல் சந்திரதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் திருவள்ளூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதலாம் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போலீஸ்காரருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செ லுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அ னுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story