கோடை காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி வழங்க வேண்டும்-அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் உத்தரவு


கோடை காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி வழங்க வேண்டும்-அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் உத்தரவு
x
தினத்தந்தி 9 April 2022 5:09 PM IST (Updated: 9 April 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

கோடைகாலம் தொடங்கி இருப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீரை வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்:
கோடைகாலம் தொடங்கி இருப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீரை வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டு உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஷ்குமார் எம்.பி, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
நாமக்கல் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.185.24 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி மக்களுக்கு அர்ப்பணித்தார். இதன் காரணமாக நாமக்கல் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தடையின்றி வழங்க வேண்டும்
இதே போன்று ராசிபுரம் நகராட்சி மற்றும் ஆர்.புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், மல்லசமுத்திரம், அத்தனூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மற்றும் 523 ஊரக குடியிருப்புகளை சேர்ந்த 8 லட்சத்து 23 ஆயிரத்து 662 பேர் பயன்பெறுவதற்காக ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த திட்டம் முழுமையடையும் போது நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி வழங்க வேண்டும். தற்போது உள்ள திட்டங்களின் படி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் திட்டங்களில் கிடைக்கும் குடிநீரை சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்களில் பழுதுகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.
மாற்று ஏற்பாடு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் ஆகியவற்றை உள்ளாட்சி நிர்வாகங்களின் அலுவலர்கள் ஆய்வு செய்து சுத்தமாக உள்ளதையும், தேவைகேற்ற குடிநீர் அளவு வருவதையும் உறுதி செய்ய வேண்டும். தேவைக்கு ஏற்றவாறு மாற்று ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களின் அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் கோடை காலம் முழுவதும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story