ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பசுந்தீவனம் பற்றாக்குறை கால்நடை வளர்ப்பு பாதிப்பு மேய்ச்சலுக்காக 30 கி.மீ. செல்வதாக விவசாயிகள் வேதனை


ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பசுந்தீவனம் பற்றாக்குறை கால்நடை வளர்ப்பு பாதிப்பு மேய்ச்சலுக்காக 30 கி.மீ. செல்வதாக விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 9 April 2022 6:09 PM IST (Updated: 9 April 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேய்ச்சலுக்காக தினமும் 30 கி.மீ. செல்வதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

கால்நடை வளர்ப்பு
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி வட்டாரம் வறட்சியான பகுதியாகும். கடந்த ஆண்டு தென்மேற்குபருவமழை, வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்த போதும் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மழை எதுவும் பெய்யவில்லை. இதனால் ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 
ஆண்டிப்பட்டி தாலுகாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்ப்பு தொழில் அதிகளவில் உள்ளது. பொதுவாக கால்நடைகள் வளர்ப்பவர்கள் அவற்றை அந்தந்த பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக அழைத்து செல்கின்றனர். பருவமழை காலம் முடிந்து சிலமாதங்கள் கால்நடைகளுக்கு இயற்கையான பசுந்தீவனங்கள் அதிகம் கிடைக்கும்.

பசுந்தீவனம் பற்றாக்குறை

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாத காரணத்தாலும், கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும், தரிசு நிலங்களில் வளர்ந்திருந்த செடிகள் அனைத்தும் காய்ந்துவிட்டது. கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வேதனையுடன் கூறுகையில், கால்நடைகளை மேய்ச்சலுக்காக தினமும் 30 கி.மீ. வரை அழைத்து செல்கிறோம். ஒரு ஆடு சராசரியாக 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும். ஆனால் ஆறு, குளங்கள் வறண்டு உள்ளதால் ஆடுகளை வளர்க்க முடியாமல் தவிக்கிறோம். மழை பெய்தால் மட்டுமே எங்களின் நிலை மாறும் என்றனர்.


Next Story