வேலூர் கொணவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ விபத்து


வேலூர் கொணவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 9 April 2022 6:36 PM IST (Updated: 9 April 2022 6:36 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கொணவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

வேலூர்

வேலூர் கொணவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ

வேலூர் கொணவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவில் பிளாஸ்டிக் கழிவு குடோன் உள்ளது. இதனை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முனீர் நடத்தி வந்தார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகளை பவுடராக மாற்றி, அதனை மறுசுழற்சி பயன்பாட்டிற்காக பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. குடோன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பவுடராக மாற்றுவதற்காக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

 இந்த நிலையில்  அதிகாலை 2 மணியளவில் திடீரென பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பிடித்து எரிந்தன. தொடர்ந்து மளமள வென்று பற்றி எரிந்த தீ குடோன் முழுவதும் பரவியது. பிளாஸ்டிக் கழிவுகள் கொழுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை வெளியேறி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

பொருட்கள் எரிந்து நாசம்

இதைக்கண்ட பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் கழிவுகள் காட்டுத்தீ போன்று எரிந்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து காட்பாடியில் இருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டது. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காலை 8 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவு நச்சுப்புகை எழுந்தது. அதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்த விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அவற்றை அரைக்க பயன்படுத்தப்படும் அரவை எந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story