பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாநில மினி மராத்தான் போட்டி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாநில மினி மராத்தான் போட்டி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 April 2022 7:12 PM IST (Updated: 9 April 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி, மாணவிகளுக்கு நடந்த மாநில அளவிலான மினி மராத்தான் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி, மாணவிகளுக்கு நடந்த மாநில அளவிலான மினி மராத்தான் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மினி மராத்தான் போட்டி
தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி சார்பாக நேற்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாநில அளவிலான மினி மராத்தான் போட்டி நடந்தது. 
போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவிகள் ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரியில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி, கருத்தபாலம், புதிய பஸ்நிலையம், சிட்டி டவர் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர்.
இந்த மினி மராத்தான் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காவல் உதவி செயலி
மாணவிகளாகிய உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த தன்னம்பிக்கை தான் உங்களை எதிர்காலங்களில் சமூகத்தில் தலை சிறந்தவர்களாக மாற்றும். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் உதவி என்னும் செயலியை தொடங்கி வைத்து உள்ளார். இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்புநிற அவசரம் என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் எங்களுக்கு உங்களின் நேரடி இருப்பிடம் பகிரப்படும். மேலும் பின்புற கேமராவை பயன்படுத்தி 15 வினாடிகள் வீடியோவும் அனுப்பப்படும். உங்கள் நேரடி இருப்பிடம் 30 முதல் 45 நிமிடங்கள் கண்காணிக்கப்படும்.
இந்த செயலியை திறந்து வைத்து அல்லது பின்னணியில் இயக்க வேண்டும். இதன் மூலம் கண்காணிக்கப்பட்டு கிடைக்கப்பெறும் தகவல்கள் கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை உங்களுக்கு வழங்கப்படும். இதில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் இருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.
மேலும் இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் மனு ரசீதின் நிலை, இணைய குற்ற நிதி மோசடி புகார், அவசர உதவி எண்கள், முதல் தகவல் அறிக்கை நிலை, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள், போலீஸ் சரிபார்ப்பு சேவைகள், வாகன சரிபார்ப்பு (திருடப்பட்ட அல்லது காணாமல் போன), இழந்த ஆவண அறிக்கை, போலீஸ் நிலைய இருப்பிடங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி தலைவர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் மீனாகுமாரி, கல்லூரி உடற்கல்வி இயக்குளர் அனிஸ்டா, சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், தூத்துக்குடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

சுத்தப்படுத்தும் பணி
தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல்துறைக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் 2-வது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைபிடிக்குமாறு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான இடங்களில் நேற்று தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி ஆயுதப்படை, தூத்துக்குடி தென்பாகம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு நடந்த தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

Next Story