வேலூர் புதிய பஸ்நிலையத்தில் டிரைவரை தாக்கியதால் அரசு பஸ்களை நிறுத்தி போராட்டம்


வேலூர் புதிய பஸ்நிலையத்தில் டிரைவரை தாக்கியதால் அரசு பஸ்களை நிறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 7:38 PM IST (Updated: 9 April 2022 7:38 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் டிரைவரை தாக்கிய கடை ஊழியர்கள் 2 பேரை கைது செய்யக்கோரி அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் டிரைவரை தாக்கிய கடை ஊழியர்கள் 2 பேரை கைது செய்யக்கோரி அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாரன் அடிக்க எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வண்ணாங்குளம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49), அரசு பஸ் டிரைவர். இவர்  அம்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு பஸ்சை ஓட்டி வந்தார். மதியம் 12.30 மணியளவில் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பஸ் வந்தபோது பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. டிரைவர் செல்வம் பஸ்நிலையத்தின் உள்ளே செல்வதற்காக ஹாரன் அடித்துள்ளார்.

இதற்கு பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள டீ, குளிர்பானங்கள் விற்பனை கடையில் பணிபுரிந்த 2 தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆபாச வார்த்தைகளால் டிரைவரை திட்டி உள்ளனர். இதற்கிடையே பஸ்நிலையத்துக்கு வந்த மேலும் சில அரசு, தனியார் பஸ்களும் செல்வம் ஓட்டி வந்த பஸ்சின் பின்னர் வரிசையாக நின்று ஹாரன் அடித்தன.

டிரைவர் மீது தாக்குதல்

இதையடுத்து செல்வம் மீண்டும் ஹாரன் அடித்தபடி பஸ்நிலையத்துக்குள் பஸ்சை ஓட்டி சென்று பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஆபாசமாக திட்டி செல்வத்தை சரமாரியாக தாக்கினர். மேலும் கையில் இருந்த சாவியால் தலையில் குத்தி விட்டனர். இதில், டிரைவரின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செல்வத்தை தாக்கிய 2 பேரையும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் கடையை பூட்டி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

கைது செய்யக்கோரி போராட்டம்

இதற்கிடையே செல்வத்தை தாக்கிய சம்பவம் காட்டுத்தீ போன்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மத்தியில் பரவியது. அவர்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறி பஸ்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. காட்பாடியில் இருந்து பாகாயம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்களும் செல்லியம்மன் கோவில் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டது.

அதனால் காட்பாடியில் இருந்து வேலூருக்கு எந்த வாகனமும் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலாறு பழைய பாலத்தில் இருந்து காட்பாடி சில்க்மில் வரை வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு மற்றும் போக்குவரத்து போலீசார், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரைவர் செல்வத்தை தாக்கியவர்களை கைது செய்யும்வரை பஸ்களை இயக்கமாட்டோம் என்று டிரைவர், கண்டக்டர்கள் தெரிவித்தனர். டிரைவரை தாக்கிய 2 பேரும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினார்கள். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. பஸ் டிரைவர் செல்வம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்கள் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து டிரைவரை தாக்கி தப்பியோடிய வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story