நாமக்கல்லில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்:
டாக்டர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் உள்ளது போல, ஆசிரியர்களின் பணி பாதுகாப்பிற்கும், மாணவர்களை நெறிப்படுத்தவும் புதிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை பணியாளர்கள், அமைச்சு பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். இதில் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராமு, சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் திம்மராயன், மாநில துணை தலைவர் புகழேந்தி, ஈரோடு மாவட்ட தலைவர் புருசோத்தமன், கரூர் மாவட்ட தலைவர் தீனதயாளன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்திட வேண்டும். தேர்வு நெருங்கும் நேரத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டதால், பல பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன, மாணவர்கள் நலன்கருதி உடனடியாக காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி, ஊதியம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்க, பணி விதிகளில் திருத்த செய்ய வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மண்டல அளவில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் சுமதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story