மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி விரைவில் நடைபெறும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி விரைவில் நடைபெறும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
நாகர்கோவில்,
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி விரைவில் நடைபெறும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
முக்கிய சோதனைகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) முன்னாள் தலைவர் சிவன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு 3 முக்கிய தகுதி சோதனைகள் நடத்தப்பட வேண்டும். முதலில் பாதுகாப்பை முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் சுற்றுச்சூழல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். எனவே ராக்கெட் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கு தேவையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக 2 ரோபோக்கள் ராக்கெட்டில் வைத்து அனுப்பப்படும். அது வெற்றிகரமாக முடிந்த பின் மனிதன் அனுப்பப்படுவார். விண்ணுக்கு மனிதனை அனுப்ப ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. தரை தள சோதனை, விண்ணில் ஏவும் சோதனை போன்றவைகளும் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்த சோதனைகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் முடிவடையும். விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடைபெறும்.
ராக்கெட் ஏவுதளம்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. இந்த ஏவுதளம் அமைப்பதற்கு 2,300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 50 சதவீத நிலங்களை தமிழக அரசு ஒப்படைத்து உள்ளது. எஞ்சிய நிலங்கள் 2 அல்லது 3 மாதங்களில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை ஒப்படைத்தவுடன் அங்கு மண் பரிசோதனை, ராக்கெட் எடை தாங்கும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டியது உள்ளது. மேலும் கட்டுமானப் பணிக்கான தொழில்நுட்ப சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
சோதனைகள் முடிந்ததும் ராக்கெட் ஏவுதளம் கட்டுமானப்பணிகள் தொடங்கும். ஒருமுறை பயன்படுத்தப்படும் ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டாக வடிவமைப்பதற்கான சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story