தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை
தேனி மாவட்டத்தில் நேற்று கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி:
கோடை மழை
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பகலில் கடும் வெயிலும், மாலையில் மழையும் பெய்து வருகிறது.
தேனியில் இன்று பகலில் 91.4 டிகிரி வெயில் அடித்தது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் 6 மணியளவில் அது கனமழையாக கொட்டித்தீர்த்தது.
போடியில் பிற்பகல் 2 மணியளவில் சாரல் மழை பெய்தது. சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் மாலையில் பலத்த மழை பெய்யத்தொடங்கி இரவு வரை நீடித்தது.
ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டியில் இன்று மாலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காற்று அதிகமாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையின் மேற்கூரை சூறைக்காற்றில் இடிந்து விழுந்தது. அப்போது கொட்டகையில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாடுகளை மீட்டனர். எனினும் இதில் 3 மாடுகள் காயமடைந்தன. இதேபோல் சூறைக்காற்றால் அந்த பகுதியில் பயிரிட்டு இருந்த சோளம் மற்றும் கம்பு பயிர்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதுபோல கம்பம், பெரியகுளம், சின்னமனூர், கூடலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்றுமாலை மழை பெய்தது. இந்த மழையால், விளை நிலங்களில் கோடை உழவு செய்த விவசாயிகள், மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களையும் இந்த மழை மகிழ்ச்சி அடைய செய்தது.
-
Related Tags :
Next Story