51 ஆதிதிராவிடர் நல விடுதிகள் விரிவுபடுத்தப்படும்


51 ஆதிதிராவிடர் நல விடுதிகள் விரிவுபடுத்தப்படும்
x
தினத்தந்தி 9 April 2022 9:09 PM IST (Updated: 9 April 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல மாணவ- மாணவிகளுக்கான 51 விடுதிகள் உள்கட்டமைப்பு வசதியுடன் விரிவுபடுத்தப்படும் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளை மாவட்ட கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்று பார்வையிட்டார். அதோடு அவர்களுக்கு சுகாதாரமான உணவு சமைத்து வழங்கப்படுகிறதா என்று மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்டு உணவின் தரம், ருசி குறித்து ஆய்வு செய்தார். அப்போது விடுதிகளை மேம்படுத்த மாணவ- மாணவிகளிடம் கருத்துருக்களை கேட்ட கலெக்டர், அதன்படி விடுதிகள் நல்ல முறையில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார். அதன் பிறகு அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

51 விடுதிகளில்...

தமிழக அரசின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 51 ஆதிதிராவிடர் நல மாணவ-மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை ஒரே நாளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
மேலும் இந்த விடுதிகளை விரிவுப்படுத்துவதற்காக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, அதனை அரசுக்கு அனுப்பி வைத்து விடுதிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

பொறுப்பாளர்கள் சஸ்பெண்டு 

இந்த ஆய்வின்போது பள்ளி- கல்லூரி விடுதிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு பராமரிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட விடுதி பொறுப்பாளர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தயாளன், மாணவிகள் விடுதி காப்பாளர் சாந்தி, மாணவர் விடுதி காப்பாளர் சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story