சந்துரு கொலை வழக்கில் நான் பொய் சொல்லவில்லை; பெங்களூரு போலீஸ் கமிஷனர் விளக்கம்
சந்துரு கொலை வழக்கில் நான் பொய் சொல்லவில்லை என பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் தமிழக வாலிபர் சந்துரு, உருது மொழி தெரியாததால் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறி இருந்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதிய தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறினார். இந்த நிலையில் கொலையான போது சந்துருவுடன் இருந்த அவரது நண்பர் சைமன் என்பவர், சந்துருவை கொலை செய்த கும்பல் உருது மொழியில் பேச கூறினர் என்று தெரிவித்து இருந்தார். இதனால் சந்துரு கொலை விஷயத்தில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உண்மையை மறைப்பதாகவும், பொய் பேசி வருவதாகவும் பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை கமல்பந்த் மறுத்து உள்ளார். அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சந்துரு கொலை செய்யப்பட்ட விஷயத்தில் போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் எனக்கு கிடைத்த தகவலை நான் கூறினேன். இந்த விவகாரத்தில் நான் பொய் கூறவில்லை. எந்த உண்மையையும் மறைக்கவில்லை. உருது மொழி தெரியாததால் சந்துரு கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் என்னிடம் கூறவில்லை. கொலை குறித்து சந்துருவின் நண்பர் சைமன் அளித்த புகாரிலும் மோட்டார் சைக்கிள் மோதிய தகராறில் கொலை நடந்ததாக தான் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story