வேப்பனப்பள்ளி அருகே பலாப்பழத்தை ருசிக்க வந்த காட்டு யானை தாக்கி விவசாயி சாவு-உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
வேப்பனப்பள்ளி அருகே தோட்டத்துக்கு பலாப்பழத்தை ருசிக்க வந்த காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார். யானையை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பனப்பள்ளி:
பலாப்பழத்தை ருசித்த யானை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, நேர்லகிரி, மகாராஜகடை ஆகிய வனப்பகுதிகளில் 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதேபோல் நேற்று அதிகாலை காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி கொங்கனப்பள்ளி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை விவசாய தோட்டம் ஒன்றில் பலாப்பழத்தை ருசித்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயியான திம்மப்பா நாயுடு (வயது 70) அவரது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அவர் யானையை கவனிக்காமல் அதன் அருகே சென்று விட்டார்.
விவசாயி பலி
அப்போது திடீரென அந்த யானை விவசாயி திம்மப்பா நாயுடுவை தாக்கியது. இதனால் அவர் யானையிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனால் அவரை விரட்டி சென்று யானை தாக்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் திம்மப்பா நாயுடு யானை தாக்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் வனத்துறை மற்றும் வேப்பனப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த திம்மப்பா நாயுடுவின் குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவம் நடந்த பகுதியில் திரண்டனர். அவர்கள் திம்மப்பா நாயுடு உடலை பார்த்து கதறி அழுதனர்.
போராட்டம்
மேலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதால் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யானை தாக்கி பலியான திம்மப்பா நாயுடு குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனக்காப்பாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் உரிய நிவாரணம் வழங்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதற்கட்ட நிவாரணமாக திம்மப்பா நாயுடு குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
சோகம்
பின்னர் போலீசார் திம்மப்பா நாயுடுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலாப்பழத்தை ருசிக்க வந்த காட்டு யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story