ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி. வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழகத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்
தமிழகத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ரேஷன் கடை திறப்பு
வேலூர் சேண்பாக்கத்தில் பெண்களால் நடத்தப்படும் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார்.
அப்போது பொதுவாக ரேஷன் கடைகள் என்றால் அதிக அளவில் குற்றச்சாட்டுகள் வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு கடையை திறப்பதில்லை. கடையை திறந்தாலும் பொருட்கள் இல்லை என்று கூறுவார்கள். மேலும் மதியத்திற்கு மேல் கடையை திறப்பதில்லை, எடையை குறைவாக வழங்குவார்கள் இது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.
இந்த கடையை முழுமையாக பெண்கள் நடத்துவதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துகொள்ள வேண்டும். கடுமையான உழைப்பாளிகள் உயர்ந்த பதவிக்கு வருவார்கள். என்னிடம் கார் ஓட்டியவர் தற்போது மண்டல தலைவரானார். டீக்கடை நடத்திய மோடி உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். உழைப்பு தான் முக்கியம். பாலாற்றில் ரூ.40 கோடிக்கு தடுப்பணை கட்டப்பட உள்ளது. அதன் மூலம் சேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இருக்காது.
இவ்வாறு அவர்பேசினார்.
வண்டல் மண் எடுக்க அனுமதி
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு விவகாரம் குறித்து வருகிற திங்கட்கிழமை விரிவாக எடுத்துக் கூற உள்ளோம். தமிழகத்தில் உள்ள ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எடுக்க யாராவது தடை செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணை கட்டப்படும் என்பது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
3 காலம்.
Related Tags :
Next Story