93 ஆண்டு பழமையான தமிழ்ப்பள்ளி, நூலகமாக மாறுகிறது; பெங்களூருவில், தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது
பெங்களூருவில், தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த 93 ஆண்டு பழமையான தமிழ்ப்பள்ளி, நூலகமாக மாறுகிறது.
கர்நாடகத்தில் ஏராளமான தமிழ் வழிக்கல்வி பள்ளிகள் இருந்தன.
ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது
அவற்றின் ஒன்று பெங்களூரு அசோக்நகர் கமிஷனர் அலுவலக சாலையில் உள்ள பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளி ஆகும். இந்த தமிழ்ப்பள்ளி கடந்த 93 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகு இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த தமிழ்ப்பள்ளி கர்நாடக அரசால் மாநில கல்வித்துறையின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.
கண்டுகொள்ளவில்லை
இந்த தமிழ்ப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து அரசு துறைகளிலும், தொழில் துறையிலும் சாதனை படைத்துள்ளனர். தற்போதும் இந்த பள்ளியில் படித்த பலர் சாதனையாளர்களாக உள்ளனர். இப்பள்ளி பெங்களூருவில் தமிழர்களின் அடையாளமாக விளங்கியது. இதற்கிடையே கன்னடம் மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகள் பெங்களூருவில் அதிகரித்தன. இதனால் இந்த தமிழ்ப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
மேலும் கர்நாடக கல்வித்துறையும் இந்த தமிழ்ப்பள்ளியை கண்டுகொள்ளவில்லை. இந்த பள்ளியை புனரமைப்பது, நிதி ஒதுக்குவது, மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது இப்படி எந்த செயலையும் செய்யாமல் இருந்து வந்தது.
புனரமைக்க கோரிக்கை
இதனால் இந்த தமிழ்ப் பள்ளியின் செயல்பாடு முடங்கியது. இதற்கிடையே இந்த தமிழ்ப் பள்ளிக்கான நிலத்தை அரசு கையகப்படுத்த நினைத்தது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த தமிழ்ப்பள்ளியை புனரமைக்க வேண்டும் என்று கன்னட வாழ் தமிழர்களும், பெங்களூருவில் உள்ள தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இதனால் தமிழ்ப் பள்ளிக்கான நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட்டது. மேலும் இந்த பள்ளியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், கட்டிடங்களை புனரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. அதில் 9 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள்.
பழமை மாறாமல்...
இந்த நிலையில் இப்பள்ளியை புனரமைக்கும் பணியை மாநில அரசும், கல்வித்துறையும் கலை மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் இந்திய தேசிய அறக்கட்டளையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இந்த தமிழ்ப் பள்ளிக்கு புதுப்பொலிவு பெற உள்ளது. இதுபற்றி மக்கள் தொடர்பு துறை கமிஷனர் விஷால் கூறியதாவது:-
நாங்கள் அசோக்நகரில் உள்ள தமிழ்ப் பள்ளியை புனரமைக்கவும், அதற்கு புதுப்பொலிவூட்டவும் முடிவு செய்துள்ளோம். இந்த பணியை இந்திய தேசிய அறக்கட்டளையிடம் ஒப்படைக்க இருக்கிறோம். அவர்கள் இந்த பள்ளியை பழமை மாறாமல் புனரமைப்பார்கள். இந்த பள்ளியின் கட்டிட வடிவமைப்பு ஆங்கிலேயர்கள் மற்றும் அங்குள்ள காலனிகளின் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டு உள்ளது.
நூலகமாக மாற்ற முடிவு
அதனால் அந்த கட்டிடக் கலை மாறாமல் அப்படியே அதை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பள்ளியில் மொத்தம் 5 வகுப்பறைகள் உள்ளன. அவற்றில் 2 வகுப்பறைகளை பள்ளிக்கு கொடுத்துவிட்டு, மற்ற 3 வகுப்பறைகளை நூலகமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி பெங்களூரு வட்டார கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘‘1 முதல் 3-ம் வகுப்பு வரையில் ஒரே அறையிலும், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை ஒரு அறையிலும் வைத்து பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த பள்ளிக் கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைப்பது முக்கிய பணியாகும். பழமையை பாதுகாப்பது நமது கடமை. அந்த வகையில் இந்த பள்ளியை பாதுகாப்பதும் கல்வித்துறையின் கடமையாகும்’’ என்று கூறினர்.
Related Tags :
Next Story