உளுந்து அறுவடை பணி தீவிரம்


உளுந்து அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 April 2022 10:45 PM IST (Updated: 9 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் உளுந்து அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் உளுந்து அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உளுந்து அறுவடை பணி
 கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், மாதிரவேளூர், தண்டேச நல்லூர், அரப்பள்ளம், பழைய பாளையம், குன்னம், பனங்காட்டான் குடி, அளக்குடி, உள்ளிட்டபகுதியில் சுமார் 10,000 ஏக்கரில் உளுந்து மற்றும் பயறு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது உளுந்து பயிர் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பூச்சி தாக்குதல்
சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது வயலில் சரியான ஈரப்பதம் வைத்து உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்தோம்.மேலும் தரிசாக கிடந்த ஆயிரம் ஏக்கர் நிலங்களில் புழுதி உழவு செய்து உளுந்து, பயிறு பயிர்களை சாகுபடி செய்தோம்.
 கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். ஆனால் பயிர்கள் நன்றாக வளர்ந்த நேரத்தில் கொடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால் உளுந்து மற்றும் பயறு காய்கள் காய்ப்பது குறைந்து விட்டது.
மகசூல் குறைந்தது
மேலும் முற்றிய உளுந்து மற்றும் பயறு காய்களை எலிகள் சேதம் ஏற்படுத்தி விட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 குவிண்டால் உளுந்து கிடைக்க வேண்டிய நிலையில் ஒரு குவிண்டால் கிடைப்பதே அரிதாகி விட்டது. தற்போது குறைந்த அளவு மகசூல் கிடைத்துள்ளதால் அறுவடை கூலிக்கு கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பயறு செடிகள் நன்கு உலர்ந்த பிறகு மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் மட்டுமே தற்போது வெறும் செடிகளை மட்டும் அறுவடை செய்து வருகிறோம்.கொள்ளிடம் பகுதியில் உளுந்து பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story