வேப்பூர் அருகே மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு
வேப்பூர் அருகே மினிலாரி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வேப்பூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சமுத்து மகன் கிருஷ்ணபிரசாத் (வயது 20), சக்திவேல் மகன் பாலாஜி (19). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மினிலாரியில் ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு அடரி நோக்கி புறப்பட்டனர்.
மினிலாரியை சேகர் என்பவர் ஓட்டினார். வேப்பூர் அடுத்த பெரிய நொசலூர் காப்பு காடு அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே மான் ஓடியது. மான் மீது மோதாமல் இருக்க சேகர் மினிலாரியை திருப்பியபோது, அந்த மினிலாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினிலாரியின் பின்புறம் ஹாலோ பிளாக் கற்கள் மீது அமர்ந்து பயணம் செய்த கிருஷ்ணபிரசாத், பாலாஜி ஆகியோர் கீழேவிழுந்து படுகாயமடைந்தனர். டிரைவர் சேகர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
சிகிச்சை பலனின்றி சாவு
விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணபிரசாத் பரிதாபமாக இறந்தார்.
பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story