காஞ்சீபுரத்தில் 3 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு - மூச்சு திணறலால் பொதுமக்கள் அவதி
காஞ்சீபுரத்தில் குப்பை கிடங்கில் 3 நாட்களாக தீ எரிவதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருகாலிமேடு பகுதியில் குப்பை கிடங்கு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மாநகராட்சிக்கு உள்பட்ட 51-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளும் திருகாலிமேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக திருகாலிமேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கு இரவு, பகலாக எரிந்து வருகிறது. திருகாலிமேடு பகுதியில் மட்டும் 3,500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குப்பை கிடங்கு தொடர்ந்து எரிந்து வருவதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கடுமையாக மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது.
3 நாட்களாக எரிந்து வரும் குப்பை கிடங்கை அணைக்க தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என திருகாலிமேடு பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் திருகாலிமேடு குப்பை கிடங்கில் எரிந்து வரும் தீயை அணைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story