தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 April 2022 12:50 AM IST (Updated: 10 April 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையில் ஆபத்தான பள்ளம் 
தர்மபுரியில் சேலம் செல்லும் சாலையில் மாவட்ட விளையாட்டு மையத்துக்கு செல்லும் சாலை பிரியும் இடத்தின் அருகில் தார் சாலையின் பக்கவாட்டு பகுதியில் காங்கிரீட் சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்ப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. சாலையில் உள்ள காங்கிரீட் மையப்பகுதி சேதமடைந்து திறந்தவெளி குழியாக மாறி உள்ளது. இந்த வழியாக நடந்து செல்பவர்கள் இந்த குழிக்குள் விழுந்து காயம் அடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, தர்மபுரி.
பகுதிநேர ரேஷன் கடை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பண்டசீமனூர் ஊராட்சி ஈஸ்வரதாசரப்பள்ளி கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டலனூர் ஊருக்கு நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
-சி.செந்தில், ஈஸ்வரதாசரப்பள்ளி, கிருஷ்ணகிரி.
தெருவில் தேங்கும் மழைநீர்
நாமக்கல் மாவட்டம் பெரியமணலியை அடுத்த ஜேடர்பாளையம் அருந்ததியர் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதிக மழை பெய்தால் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி ளஉ்ளனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-நந்தகுமார், ஜேடர்பாளையம், நாமக்கல்.
சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள்
சேலம் அங்கம்மாள் காலனி கண்ணகிநகர் அருகில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
-ராஜா, சாமிநாதபுரம், சேலம்.
கண்காணிப்பு கேமரா
சேலம் சூரமங்கலம் மாநகராட்சி 20, 22-வது வார்டு ஆண்டிப்பட்டி பகுதியில் 4 ரோடு உள்ளது. அந்த வழியாக சிவதாபுரம், பழைய சூரமங்கலம், சேலம் சந்திப்பு, சேலம் உருக்காலை செல்வதற்கு பிரியும் இடத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் மற்றும் திருட்டு நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
-ராஜ்குமார், சூரமங்கலம், சேலம்.
ஆக்கிரமிக்கப்பட்ட மயானம்
சேலம் மாவட்டம் மாசிலாபாளையம், கோவில்பாளையம் கிராம மக்களுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் உள்ளது. தற்போது மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், மாசிலாபாளையம், சேலம்.
குண்டும், குழியுமான சாலை
சேலம் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-சுதாகர், தாரமங்கலம், சேலம்.
====

Next Story