உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை


உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 April 2022 12:54 AM IST (Updated: 10 April 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

 நத்தக்காடையூர் நகரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை, முள்ளிப்புரம், பரஞ்சேர்வழி ஆகிய வருவாய் கிராம சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக  பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் ஆகஸ்டு மாதம் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் கடந்த ஜனவரி மாதம் கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி எள், நிலக்கடலை சாகுபடி செய்து உள்ளனர்.  தற்போது பயிர் பாதுகாப்பு மேலாண்மையில் உரம் இடுதல் பணியும், பூச்சி மருந்து தெளித்தல் பணியும் தீவிரமாகநடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நத்தக்காடையூர் நகர பகுதிகளில் செயல்பட்டு வரும் உரக்கடைகள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகளில் காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எம்.ரவி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதன்படி உரம், பூச்சி மருந்து கடைகளில் பாதுகாப்பான முறைகளில் உர மூட்டைகள், பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதா என  பார்வையிட்டார்.
நடவடிக்கை
பின்னர் வேளாண்மை அதிகாரி கூறியதாவது
 விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து  விற்பனை செய்யும்போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சரியான அளவு முறைகளை பின்பற்ற வேண்டும்.  கூடுதலாக வேறு உரங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது. இதன்படி வேளாண்மை துறையின் இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட உரக்கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை மேற்கொள்ளப்படும்.
மேலும் விவசாயிகளுக்கு உரங்களை சரியான விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை மீறி கூடுதல் விலைக்கு விற்றாலும் உரம், பூச்சி மருந்துகள் வாங்கும் விவசாயிகளுக்கு பில் வழங்காமல் விட்டாலோ வேளாண்மைத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரம் இருப்பு பதிவேட்டில் உள்ள இருப்பு விவரங்கள், பொருள் இருப்புடன் சரிபார்த்து சரி செய்து விற்பனை எடை எந்திரத்தில் இருப்பு அளவுடன் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story