நடிகை ஆண்ட்ரியா நடன நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு
மல்லூர் அருகே கோவில் திருவிழாவில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நாற்காலிகளை ரசிகர்கள் வீசியதால் அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே கோவில் திருவிழாவில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நாற்காலிகளை ரசிகர்கள் வீசியதால் அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
கோவில் விழா
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட வேங்காம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பூவாயம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு திரைப்பட இசை நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டார். இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் மேடையில் ரசிகர்கள் முன்பு தோன்றிய நடிகை ஆண்ட்ரியா சினிமா பாடல்களை பாடினார். இதை ரசிகர்கள் உற்சாகத்துடன் கேட்டு ரசித்தனர்.
நாற்காலிகளை தூக்கி வீசினர்
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையின் மேலே ஏற முயன்றனர். மேலும் ஆண்ட்ரியா பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர். ஆனால் நடிகை ஆண்ட்ரியா நடனம் ஆடாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
தொடர்ந்து அவர், நான் பாடல் மட்டும் தான் பாடுவேன். நடனம் ஆட முடியாது என கூறினார். எனினும் ரசிகர்கள் நடனமாட வேண்டும் எனக்கூறி தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். இதனிடையே ரசிகர்கள் பலர் மேடையை சூழ்ந்தனர். சிலர் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி கலாட்டா செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தள்ளுமுள்ளு
இதையடுத்து போலீசார் ரசிகர்களை தடுத்தனர். இதன் காரணமாக ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போன்று காணப்பட்டது.
இதையடுத்து நடிகை ஆண்ட்ரியா நடனம் ஆடாமல் அங்கிருந்து கிளம்பினார் அவரை போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story