சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை


சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 10 April 2022 1:45 AM IST (Updated: 10 April 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் தலைவாசல் அருகே 2 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.

சேலம்:-
சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் தலைவாசல் அருகே 2 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
மழை
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவானதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்தநிலையில், சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே மிதமான மழை பெய்ய தொடங்கியது. அழகாபுரம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், மணக்காடு, அம்மாபேட்டை, குகை, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், பெரமனூர், அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் சிறிது நேரம் மழை பெய்தது.
இரவில் சில இடங்களில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டதால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சேலத்தில் நேற்று காலை நிலவரப்படி 3.7 மில்லி மீட்டர் மழையும், ஏற்காட்டில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை ஏதும் பதிவாகவில்லை.
பொதுமக்கள் அவதி
இந்தநிலையில், சேலத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது. அழகாபுரம் பெரியபுதூர் மொரப்பன் காடு பகுதியில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருவில் ஆறாக ஓடியது. 
அங்குள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல், மணக்காடு ராஜகணபதி நகர், களரம்பட்டி, பச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கு வசித்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.  இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது.
வாழை மரங்கள் சேதம்
தலைவாசல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சார்வாய், மணிவிழுந்தான், சார்வாய் புதூர், தேவியாக்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தேவியாக்குறிச்சியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு வாழை தோப்பில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
சேலம் அழகாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். விவசாயியான இவர், தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மாடுகளை வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. 
பின்னர் திடீரென மின்னல் தாக்கியதில் ஜெயக்குமாருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று பரிதாபமாக செத்தது. இதனால் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்துள்ளனர்.

Next Story