அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா
x
தினத்தந்தி 10 April 2022 1:54 AM IST (Updated: 10 April 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

வேங்கராயன்குடிகாட்டில், நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டு கிடப்பதால் விற்க முடியாமல் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்து கிடக்கிறார்கள். எனவே உடனடியாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டு்ம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாஞ்சிக்கோட்டை;
வேங்கராயன்குடிகாட்டில், நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டு கிடப்பதால் விற்க முடியாமல் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்து கிடக்கிறார்கள். எனவே உடனடியாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டு்ம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
மூடப்பட்ட கொள்முதல் நிலையம்
தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதலுக்காக நூற்றுக்கணக்கான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருந்தன. தற்போது நெல் வரத்து இல்லாததால் பல ஊர்களில் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டனர். நாஞ்சிக்கோட்டையை அடுத்த வேங்கராயன்குடிகாட்டில் இயங்கி வந்த நெல் கொள்முதல் நிலையமும் மூடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை அருகேயுள்ள வேங்கராயன்குடிகாட்டில் ஏரிப்பாசனத்தை வைத்து வேங்கராயன்குடிகாடு, அதினாம்பட்டு, வல்லுண்டான்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்த நெல் அறுவடை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 
விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக வேங்கராயன் குடிகாட்டில் செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் அந்த கொள்முதல் நிலையம் மூடப்பட்டு உள்ளது.
நெல்லை கொட்டி காத்திருக்கும் விவசாயிகள்
அதனால் கொள்முதல் நிலைய வாசலிலேயே தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை குவியல், குவியலாக கொட்டி வைத்து விற்பனை செய்வதற்காக பல நாட்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக பல முறை நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் கொட்டி வைக்கப்பட்டு உள்ள நெல்லை மூடி வைப்பதற்கு தார்ப்பாய் இல்லாததால் ஆடு, மாடுகள் நெல்லை தின்று வருவது மட்டுமல்லாமல் நெல்லை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் கவலைப்படுகின்றனர். 
மீண்டும் திறக்க கோரிக்கை
எனவே நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் உடனடியாக வேங்கராயன்குடிகாட்டில் மூடப்பட்டு உள்ள கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறந்து விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story