நெஞ்சம் பொறுக்குதில்லை இது போன்ற நிலையை கண்டு...!


நெஞ்சம் பொறுக்குதில்லை இது போன்ற நிலையை கண்டு...!
x
தினத்தந்தி 10 April 2022 2:42 AM IST (Updated: 10 April 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

மேலூர், வாடிப்பட்டி பகுதிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல்மூடைகள் மழையில் நனைந்து வீணாகின.

சாப்பாடு தட்டில் ஆவி பறக்க சோற்று பருக்கைகள். நாம் ஆசை தீர சோற்று பருக்கையில் பலவகை குழம்பு ஊற்றி சாப்பிட்டு பசியாறி கொள்கிறோம். ேசாற்று பருக்கை சும்மா ஒன்றும் கிடைப்பதில்லை என்பதை இன்றைய தலைமுறையினர் மட்டுமில்லாமல் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் உணர வேண்டும். கையில காசு இருக்கு. மளிகை கடைக்கு சென்று பணம் கொடுத்தால் அரிசி மூடையை தூக்கி வந்து விடலாம் என்ற நினைப்பு தான் பலரிடமும் உள்ளது. 
அரிசியை எந்த எந்திரமும் உடனே உற்பத்தி செய்து தராது. அரிசி உற்பத்திக்கு பின்னால் ஒட்டிய வயிற்றோடு தான் பசியாக இருந்தாலும் தன்னை நம்பி உள்ளவர்களின் பசியை தீர்க்க வேண்டும் என்று அல்லும் பகலும் உழைத்த விவசாயியின் வியர்வை துளிகள் சிந்திய உழைப்பு இருக்கிறது.
மழையை எதிர்பார்த்து, கழனியில் காளையை பூட்டி, உழவு செய்து விதை நெல்லை விதைத்து, பருவம் பார்த்து நாற்றை பிடுங்கி, உழவு செய்த நிலத்தில் நடவு செய்து, முறையாக தண்ணீர் பாய்ச்சி, உரம், மருந்து தெளித்து, நெற்கதிரில் கதிர் பிடிக்கும் காலம் வரை கண்ணும், கருத்துமாக இரவு, பகலாக விழித்திருந்து, மழை பெய்யுமா என வானம் பார்த்து காத்திருந்து, செங்கதிர் வந்தவுடன் அதை பக்குவமாக நாள் பார்த்து அறுவடை செய்து, புத்தம் புதிய நெல்மணிகளை விதைநெல்லுக்கு எடுத்து வைத்து விட்டு, வாங்கிய கடனை அடைக்க அத்தனை நெல்மணிகளையும் விற்று, தான் பசியாற கையில் மஞ்சள் பையுடன் ரேஷன் கடை வாயிலில் நிற்கிறான் இன்றைய விவசாயிகள் பலர்.
அதோடு நிற்கவில்லை நெல்மணிகள். கொள்முதல் செய்த நெல்மணிகள் அரிசி ஆலைகள் அரைக்கப்பட்டு, சிப்பம் பைகளாக தயார் செய்யப்பட்டு மளிகை கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அங்கு சென்று அரிசியை வாங்கி வந்து இல்லத்தரசிகள் தங்கள் வீட்டு பாத்திரத்தில் சமையல் செய்கிறார்கள். இப்போது வருகிறது சுட, சுட சோற்று பருக்கைகள்.
3 மாதங்கள், 4 மாதங்கள் தவம் இருந்து விவசாயிகள் பெற்று கொடுத்த முத்துமணிகள் தான் இந்த நெல்மணிகள். ஆனால் இன்றோ... ஒரு சில அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயி முதல் சுமை தூக்கும் ெதாழிலாளி என பலரின் உழைப்பும் வீணாகிறது மழையில் நனையும் நெல்மூடைகளால். இதை பார்க்கும் போது எந்த விவசாயிக்கும் நெஞ்சம் பொறுக்கவில்லையே என்று சொல்ல தான் தோன்றும். 
அந்த வகையில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் ஆங்காங்கே தார்ப்பாய் போடாமல் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல்மூடைகள் மழையில் நனைந்து வீணாகின.

5 ஆயிரம் மூடைகள் சேதம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் நெல் சேமிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை கிழக்கு ஒன்றியம் மற்றும் மேலூர் கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு இங்குள்ள 3 சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இங்கு 5000-க்கும் மேற்பட்ட நெல் மூடைகள் திறந்தவெளியில் வரிசைப்படுத்தப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சரிவர முழுமையாக பாலித்தீன் கவர்கள் கொண்டு மூடப்படாத நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக, நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகின.

வாடிப்பட்டி

இதே போல வாடிப்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடைகள் கொள்முதல் செய்த பின்பும் எடுத்துச் செல்லாமல் அந்தந்த களங்களில் வைத்துள்ளனர். குறிப்பாக வடுகப்பட்டி, தனிச்சியம் பகுதிகளில் சேவை சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து நெல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் நேற்று பெய்த மழையில் அனைத்து நெல் மூடைகளும் நனைந்தன. இதுபோல் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் அந்த நெல் முழுவதும் முளைக்கத் தொடங்கிவிடும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். வாடிப்பட்டி பகுதியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கிடங்கில் நெல் மூடைகளை பத்திரப்படுத்தி வைக்கலாம். அதுபோல் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலையில் உள்ள குடோனில் நெல் மூடைகளை பாதுகாப்பாக வைக்கலாம். அதுபோல் வாடிப்பட்டி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு சொந்தமான பல குடோன் கட்டிடங்கள் நெல் மூடைகள் வைப்பதற்காக கட்டப்பட்டு இருக்கிறது. அவைகளை சீரமைத்து அங்கும் நெல் மூடைகளை பத்திரப்படுத்தி வைக்கலாம். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கிலோ அரிசி ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போரால் அங்கு சாப்பிட ரொட்டி துண்டு கூட கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் பலர் உண்டு. இது போன்ற நிலைைம வருங்காலங்களில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மழையில் நனையும் நெல்மூடைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Next Story